12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
2024- 25ஆம் கல்வி ஆண்டில் மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி, மார்ச் 25ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. கடைசி நாளான மார்ச் 25ஆம் தேதி இயற்பியல் மற்றும் பொருளாதார பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.
இந்தத் தேர்வை சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதற்காகத் தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
12ஆம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கின. ஏப்ரல் 17ஆம் தேதி வரை இந்தப் பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்கள் தங்களின் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்கீழ் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மாணவர்கள் cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளத்தில் சென்று தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தற்போது10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (ஏப்ரல் 21) தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கூடுதல் தகவல்களுக்கு: tnresults.nic.in, dge.tn.gov.in