#featured_image %name%
இந்தியாவின் மீதான தாக்குதலின் போது பாகிஸ்தான் துருக்கி நாட்டில் இருந்து பெற்ற ட்ரோன்களை கொண்டும் சீன நாட்டிலிருந்து பெற்ற ஏவுகணைகளைக் கொண்டும் தாக்கியதாக இந்திய ராணுவம் முறையாக உறுதிபட தெரிவித்தது.
ஆபரேஷன் சிந்தூர் எப்படி நடந்தது, என்ன நடந்தது என்பது குறித்து நாட்டுக்கு விளக்குவதற்காக, நேற்று மாலை ஊடக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் முப்படைகளின் சார்பில் அவற்றின் டிஜிஎம்ஓ.,க்கள் கலந்து கொண்டு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராணுவம் மற்றும் விமானப்படை, கடற்படை டி.ஜி.எம்.ஓ.,க்கள் நேற்று மாலை விளக்கம் அளித்த நிலையில், அதே போன்று இன்று மதியம் 2.30க்கும், இந்திய முப்படைகள் தரப்பில் ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கம் அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று மதியம் 230 க்கு ராணுவத்தின் சார்பில் ஊடகவியலாளர்களின் சந்திப்புக்கு ஏற்பாடானது.
செய்தியாளர்களுடனான இந்தக் கேள்வி – பதில் நிகழ்ச்சியின் போது, நேற்று தெரிவிக்கப்பட்டது போலவே சில ரகசியங்களை நாங்கள் இங்கே வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள முடியாது. எனவே அதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப வேண்டாம். காரணம், இப்போதும் போர்ப் பதற்றமான சூழல் நிலவுகிறது. ராணுவ நடவடிக்கை நிறைவடையவில்லை. ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் தரப்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நாம் இப்போது ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்தியிருக்கிறோம் என்று ராணுவத்தின் தரப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டது.
பாகிஸ்தான் ஏவிய துருக்கி நாட்டு ட்ரோன்கள்அனைத்தையும் நம் உள்நாட்டுத் தயாரிப்பிலான ஆயுதங்களின் உதவியுடன் சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
முன்னதாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே மே10ம் தேதி சமரசப் பேச்சு நட்நத நிலையில், ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக இரு நாடுகளும் ஒப்புக் கொண்டு, அன்றே மாலை 5 மணிக்குப் பின்னர் தாக்குதல்கள் நடக்காது என்று புரிந்துணர்வு அடிப்படையில் ஒப்புக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த்னர். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து சமரசப் பேச்சு வரும் 12ம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணிக்கு நடப்பதாக இருந்த பேச்சுவார்த்தை, மாலை 5 மணிக்கு மேல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் முப்படைகள் சார்பில் செய்தியாளர் சந்திப்பு இன்று மதியம் 2.30 மணிக்குத் தொடங்கி அரைமணி நேரம் நடைபெற்றது. இதில், ராணுவ நடவடிக்கைக்கான டி.ஜி.எம்.ஓ., ராஜிவ் கய் பேசியபோது, “பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடியாக நாம் பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைத்தோம். ஆனால், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் தலையீடு செய்தது பரிதாபத்திற்குரியது. அதனால்தான் நாங்கள் தக்க பதிலடி கொடுப்பது என்று முடிவு எடுத்தோம். கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் தாக்குதல் முறை வெகுவாக மாறியிருக்கிறது” என்றார்.
இந்நிகழ்வில் பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, “பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தினோம். பாகிஸ்தான் ராணுவம் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. பயங்கரவாதிகளின் பிரச்னையை பாகிஸ்தான் ராணுவம் தங்களுடைய பிரச்னையாக மாற்றியுள்ளது. நமது வான்வழி அமைப்பு பாதுகாப்பானது சுவர் போன்ற அதை அகற்றுவது எளிதல்ல.பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு, பதில் தாக்குதல் நடத்த வேண்டிய சூழல் எழுந்தது.
“பாகிஸ்தான் அனுப்பிய அனைத்து ட்ரோன்களையும் அழித்தோம். இதில், நமது தயாரிப்புகளான நவீன ரக ஆயுதங்களைக் கொண்டு, அனைத்து ட்ரோன்களையும் அழித்தோம். எங்களது இந்த நடவடிக்கையில் மத்திய அரசு உறுதுணையாக இருந்தது. மத்திய அரசின் கொள்கையால் நாங்கள் வலிமை பெற்றோம். மத்திய அரசு நிதி ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் எங்களுக்கு துணை நின்றது.
“பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்கள் அனைத்தும் துருக்கி நாட்டில் தயாரிக்கப்பட்டவை. ஏவுகணைகள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. எந்த நாட்டில் தயாரிக்கப் பட்டவையாக இருந்தாலும் அவற்றை அழிக்கும் வல்லமையை நமது நவீன தொழில்நுட்ப திறன் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ஏவிய துருக்கியின் ட்ரொன்களும் சீனாவின் ஏவுகணைகள் மற்றும் அதிநவீன போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.
“வான்வழித் தாக்குதலின் போது, நமக்கு சிறிய அளவு பாதிப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானுக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. ரஹீம்யார் கான் விமானப்படை தளத்தில் இந்தியா நடத்திய தாக்குதலில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.” என்றார்.
இந்நிகழ்வில் பேசிய வைஸ் அட்மிரல் பிரமோத், “கடற்படை அதிகாரிகள் இரவுபகல் பாராதுபணியாற்றி வருகின்றனர். எதிரிப் படைகளைத் தாக்கி நமது படை வல்லமையை நிலைநிறுத்தி உள்ளோம். முப்படைகளும் அணிவகுத்து ஒருங்கிணைந்து செயல்பட்டதால், எதிரிப் படைகள் நம் அருகில் நெருங்க முடியவில்லை. பாகிஸ்தானின் அத்துமீறலை எதிர்கொள்ள இந்தியாவின் அனைத்து ராணுவப் பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன.” என்றார்.
செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பாகிஸ்தான் அணுஆயுதக் கிடங்கான கிரானா மலைப்பகுதியில் இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்கியது என்று கூறப்படுவது குறித்து கேட்டபோது, கிரானா மலைப் பகுதியில் அணு ஆயுதங்கள் இருப்பது குறித்து எங்களுக்கு தெரியாது. நாங்கள் குண்டுகளை வீசவில்லை. இதுகுறித்து மேலும் எதுவும் கூறுவதற்கில்லை” என்று முடித்துக் கொண்டார் விமானப் படைப் பிரிவின் டிஜிஎம்ஒ பாரதி.
News First Appeared in