பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவரும், அவருடைய மகனுமான அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது பகிரங்கமாகவே தெரியவந்தது. பாமக தலைவராக நானே இருப்பேன் என ராமதாஸ் திடீரென அறிவித்தார். அதற்கு பதிலடி கொடுத்த அன்புமணி, தான் நிர்வாகிகளால் தேர்தெடுக்கப்பட்டவன் என்று கூறியதோடு, தன்னை சந்திக்க தன்னுடைய இடத்திற்கு வருமாறு நிர்வாகிகளிட கூறியது பெரும் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், கட்சியினர் சிலர், உண்மையான பிரச்னை அவர்களுக்குள் இல்லை என்றும், ராமதாஸ் மற்றும் அன்புமணியின் மனைவி சௌமியா இடையேயும்தான் என கூறியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக, கடந்த 11-ம் தேதி, சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாடு மாமல்லபுரம் அருகே நடைபெற்றது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ஒரே மேடையில் அமர்ந்திருந்த இந்த மாநாட்டில், பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணியை மறைமுகமாக விமர்சித்து பேசியது, அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதோடு, இளைஞரணித் தலைவரான முகுந்தனுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்படாததும், பாமக நிர்வாகிகளிடையே பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்திய நிலையில், அதனை கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்துள்ளார். அதோடு, அவருக்கு ஆதரவான ஏராளமான மாவட்ட செயலாளர்களும் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். பாமக மாவட்ட ரீதியாக 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் 13 முதல் 17 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது.
கௌரவ தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்பட மொத்தம் 50 நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் வெற்றி பெறும் வித்தையை நிர்வாகிகளுக்கு வழங்கியதாக தெரிவித்தார். அதற்காகவே இந்த கூட்டத்தை நடத்தியதாகவும், வெற்றி பெறுவதற்கு எப்படி உழைப்பது, சட்டமன்ற தொகுதிகளில் எப்படி வெற்றி பெறுவது என்பதை சொல்லிக் கொடுக்கவும், கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவதற்காகவுமே இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறினார்.
மேலும், தொடர்ந்து 7 நாட்கள் வன்னியர் சங்க நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், அமைப்பு நிர்வாகிகளின் கூட்டம் தைலாபுரத்தில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்புமணி புறக்கணிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவர் வரலாம், வராமலும் போகலாம், அது அவரது விருப்பம் என்று தெரிவித்ததுடன், மாநாட்டிற்குப் பிறகு களைப்புடன் இருப்பதாலேயே சில மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வரவில்லை என்றும், அவர்கள் தன்னுடன் தொலைபேசியில் பேசியதாகவும் கூறினார்.
மேலும், பாமக-வில் கோஷ்டி மோதல் இல்லை. கூட்டணி இல்லாமலேயே தனியாக நின்றாலும் 40 தொகுதிகளில் பெற்றி பெறுவோம் என கூறிய அவர், ஆனால், தேர்தலில் கட்டாயம் கூட்டணி உண்டு எனவும் உறுதிபட தெரிவித்தார். சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும், சீற்றம் குறையாது என்றும், ஆனால், கால்கள் பழுதுபடாத சிங்கத்தின் சீற்றம் அதிகமாக இருக்கும், அது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற சீற்றம் என்று கூறினார்.
அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், மாநாட்டில் அன்புமணியை மறைமுகமாக ராமதாஸ் விமர்சித்ததாலேயே இத்தகைய நிலை என்றும் களைப்பால் கூட்டத்திற்கு வரவில்லை என ராமதாஸ் சப்பை கட்டு கட்டுவதாகவும், சில மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அன்புமணியின் அறிவுறுத்தலால் தான் மற்ற மாவட்ட செயலாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அதோடு, கட்சியில், முக்கிய பிரச்னை ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே இல்லை என்றும், பிரச்னையே ராமதாசுக்கும், சௌமியா அன்புமணிக்கும் இடையேதான் என குண்டை தூக்கிப் போடுகின்றனர். இதற்கு பின்னணியில் முகுந்தனுக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதுதான் என்று கூறப்படுகிறது.
எது எப்படியோ, பாமக-விற்குள் கோஷ்டிப் பிரச்னை இல்லை என்று ராமதாஸ் கூறினாலும், பிரச்னை இருப்பது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்துவிட்டது. அடுத்த வருடம் தேர்தல் வரும் நிலையில், இந்த உட்கட்சி பிரச்னை, அல்லது குடும்பப் பிரச்னை என்று கூட கூறலாம், அது எங்கு போய் முடியும் என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.