அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளின் ஒத்துழைப்புடன் கடந்த 1998-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையம் உருவாக்கப்பட்டது. அது விண்வெளியில் விண்வெளி வீரர்களின் ஆய்வுக்கூடமாக செயல்படுகிறது. இந்த நிலையம் 2031-ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், சீனா ‘தியாங்காங்’ என்ற பெயரில் தனியாக ஒரு விண்வெளி நிலையத்தை விண்வெளியில் நிரந்தரமாக அமைத்து பராமரித்து வருகிறது. இந்த நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவுக்கு சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்க முடிவு செய்து அதற்கான ஆரம்ப கட்டப்பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. ‘பாரதிய அந்தரிக்ஷ் நிலையம்’ என்ற பெயரில் பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த விண்வெளி நிலையத்தை அமைக்க உள்ளனர்.
இதில் 15 முதல் 20 நாட்கள் 6 விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட முடியும். வருகிற 2035-ம் ஆண்டுக்குள் இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வரவிருக்கும் விண்வெளி நிலையம் 50 டன்களுக்கு மேல் எடை கொண்டதாக இருக்கும். இந்த விண்வெளி நிலையத்தை சுற்றுப்பாதையில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். முதல் பாகம் விண்ணில் செலுத்தப்பட்டு 7 ஆண்டுகள் கழித்து இந்தியா தனது விண்வெளி மையத்தை முழுமையாக இயக்கத் தயாராக இருக்கும். இது இந்தியாவின் விண்வெளி லட்சியங்களில் ஒரு வரலாற்று திட்டமாக பார்க்கப்படுகிறது. உலகின் முன்னணி விண்வெளிப் பயண நாடுகளில் இந்தியாவின் நிலையை மேலும் உறுதிப்படுத்தும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.