தமிழ் சினிமாவில் தன்னை ஒரு காமெடியனாக நிலை நிறுத்திக் கொண்ட சூரி இப்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி ஹீரோவாக நடிக்கும் படங்கள் பெரும்பாலும் ஹிட் படங்களாகவே மாறி உள்ளன. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் திரைக்கு வந்த விடுதலை படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
சூரியை ஒரு மாஸ் ஹீரோவாக இந்த படம் காட்டியது. இப்படியொரு ஹீரோவை தமிழ் சினிமா எப்படி காமெடி நடிகராக காட்டியது என்று சொல்லும் அளவிற்கு சூரியின் ஹீரோ அவதாரம் இருந்தது. இந்தப் படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு விடுதலை 2, கொட்டுக்காளி, கருடன் ஆகிய படங்கள் சூரியை முழு நேர ஹீரோவாக மாற்றியது. கடைசியாக சூரியின் நடிப்பில் வெளியான படம் தான் 'மாமன்'. ஏற்கனவே மாஸ் ஹீரோவாக தன்னை காட்டிய சூரிக்கு 'மாமன்' படம் அக்கா தம்பி பாசத்தின் வெளிப்பாடாக அமைந்தது.
இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கி இருந்தார். சூரிக்கு ஜோடியாக, இளம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க, சுவாசிகா, பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த மே 16ஆம் தேதி திரைக்கு வந்த சிறிய பட்ஜெட் படம் தான் மாமன். தாய் மாமனுக்கும், அக்காவின் மகனுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள் தான் 'மாமன்' படத்தின் கதை.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற இந்தப் படம் மொத்தமாக ரூ.40 கோடி வரையில் வசூல் குவித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் மாமன் எப்போது ஓடிடிக்கு வரும் என்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி வரும் 13 ஆம் தேதி மாமன் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஜீ5 நிறுவனம் தான் மாமன் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது.