தமிழ் சினிமாவை தன்னுடைய அபார நடிப்பாலும், தமிழகத்தை தன்னுடைய அசாத்திய திறமையாலும் ஆட்டி படைத்தவர் கேப்டன் விஜயகாந்த். கோலிவுட் திரையுலகம் கண்டெடுத்த கருப்பு எம்ஜிஆர் என இவரை ரசிகர்கள் கொண்டாடினர். அதே போல் தன்னிடம் கஷ்டம் என வருபவர்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ள விஜயகாந்த், தன்னை தேடி வருபவர்கள் யாரையும் பசியோடு அனுப்ப கூடாது என்பதை தன்னுடைய வாழ்நாள் கொள்கையாகவே வைத்திருந்தார்.
விஜயகாந்த் முன்னணி நடிகராக இருக்கும் போதே... பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டநிலையில், அவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர். விஜயகாந்த் மறைவுக்கு பின்னர், விஜய பிரபாகரன் தீவிரமாக தன்னுடைய அம்மாவுடன் இணைந்து அரசியல் பணிகளை கவனித்து வரும் நிலையில், சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நிலைத்து நிற்க போராடி வருகிறார்.
'சகாப்தம்' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சண்முக பாண்டியன் நடிப்பில், கடந்த வாரம் ரிலீஸ் ஆன திரைப்படம், 'படைத்தலைவன்'. இந்த படத்தில் தன்னுடைய திறமையான நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். இந்த படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அதே போல் இதுவரை சுமார் 5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள இந்த படம், திரையரங்குகளில் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல் நாள் அன்று தன்னுடைய அண்ணனோட திரையரங்கிற்கு விசிட் அடித்த சண்முக பாண்டியன் ரசிகர்கள் இந்த படத்திற்கு கொடுக்கும் வரவேற்பை பார்த்தும் தன்னுடைய தந்தையை நினைத்தும் கண் கலங்கினார். இந்த படத்தை தொடர்ந்து சண்முக பாண்டியன் நடித்து வந்த 'கொம்பு சீவி' திரைப்படம் தற்போது, படப்பிடிப்பு முடைவடிந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க... தற்போது தன்னுடைய அண்ணன் திருமணம் குறித்த செய்தியை கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சண்முக பாண்டியன். கடந்த 2019-ஆம் ஆண்டு விஜய பிரபாகரனுக்கு பிரபல தொழிலதிபர் மகள் கீர்த்தனா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அதன் பின்னர் விஜயகாந்த் உடல் நிலை காரணமாக தொடர்ந்து, இவரது திருமண ஏற்பாடுகள் எதுவும் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
விஜயகாந்த் மறைந்த பின்னர், ஒரு வருடம் ஆன பின்னரே விஜய பிரபாகரனுக்கு திருமணம் நடக்கும் என அவரது நெருங்கிய வட்டாரத்தில் கூறப்பட்ட நிலையில், தற்போது படைத்தலைவன் செய்தியாளர் சந்திப்பின் போது விரைவில் எங்கள் வீட்டிற்கு அண்ணி வரப்போகிறார் என கூறி இந்த ஆண்டு விஜய பிரபாகரனுக்கு திருமணம் நடைபெற வாய்ப்புள்ள தகவலை உறுதி செய்துள்ளார். அதே நேரம் ஏற்கனவே விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணான கீர்த்தனா தான் மணமகளா? அல்லது வேறு யாரையாவது விஜய பிரபாகரன் திருமணம் செய்து கொள்ள உள்ளாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.