மாத்தையா போல மல்லை சத்யாவும் ஒரு துரோகி என வைகோ பகிரங்கமாக தெரிவித்துள்ளது மதிமுகவில் புயலைக் கிளப்பியுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவின் அரசியல் பிரவேசத்தில் இருந்தே கட்சிக்குள் குழப்பங்கள் வெடிக்க தொடங்கின. வாரிசு அரசியலை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கிய வைகோவே தனது மகனை முதன்மைச் செயலாளராக்கி வாரிசு அரசியல் செய்கிறார் என வைகோ மீது சொந்தக் கட்சி நிர்வாகிகளே குற்றம் சாட்டினர். மேலும் பல மதிமுக சீனியர்கள் அதிருப்தியில் கட்சியை விட்டே வெளியேறினர்.
ஆனால் துரை வைகோ ஒரு படி மேலே போய் கட்சி சீனியர்களை வெளிப்படையாகவே எதிர்க்க தொடங்கினார். கட்சியின் சீனியரும் மதிமுக துணை பொதுச்செயலாளருமான மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவுக்கும் இடையே அதிகார மோதல் வெடித்தது. ஆதரவாளர், கட்சி நிர்வாகி என்பதை தாண்டி மல்லை சத்யாவை மகன்போல் பார்த்தவர் வைகோ.
இந்நிலையில்தான் மகனா மல்லை சத்யாவா என்ற நெருக்கடி வைகோவுக்கு ஏற்பட்டது.இருவரின் ஆதரவாளர்களும் மாற்றி மாற்றி ஒருவரை சாடி வந்தனர். மல்லை சத்யாவை கட்சியை விட்டே நீக்க வேண்டும் என்பது வரை சென்ற இந்த மோதலில், வைகோ தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி வைத்தார்.
பின்னர் துரை வைகோவும் பொதுவெளியில் அமைதி காத்தாலும் தனிப்பட்ட முறையில் எலியும் பூனையுமாக இருந்து வருவதாகவே சொல்லப்பட்டது. இந்நிலையில் சில நாட்களாகவே மல்லை சத்யாவின் செயல்பாடுகள் வைகோவுக்கு அதிருப்தி அளிக்கும் விதமாக இருந்து வந்ததாக சொல்லப்பட்டது.
கட்சிப் பணிகளில் மல்லை சத்யாவின் ஈடுபாடு குறைந்ததாகவும், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் தன்னை மதிமுக நிர்வாகி என அவர் அடையாளம் காட்டி கொள்ள விரும்பாததும் வைகோவின் கோபத்தை கூட்டியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய வைகோ, பிரபாகரனுக்கு துரோகம் செய்த மாத்தையா போல மல்லை சத்யாவும் துரோகம் செய்துவிட்டார் என்பது போன்ற கருத்தை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
’’மல்லை சத்யா சமீப நாட்களில் மதிமுகவின் எந்த கூட்டங்களில் கலந்து கொண்டாலும் இறுக்கமான முகத்தோடுதான் இருந்தார். சமீபத்தில் அவர் வெளிநாடு பயணம் சென்றபோது கூட மாமல்லபுரம் தமிழ் சங்கத் தலைவராகத்தான் அங்கு சென்றார். அவர் ஒருபோதும் தன்னை ஒரு மதிமுக நிர்வாகி என எங்கேயும் சொல்லவில்லை.
எனது பெயரையோ கட்சியின் பெயரையோ அவர் எங்கேயும் உச்சரிக்கவில்லை. வெளிநாடு சென்றதைக் கூட என்னிடம் தெரிவிக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வேலையைத்தான் அவர் செய்து கொண்டிருந்தார்’’ என்று பேசினார் வைகோ.
இந்த நிலையில் மல்லை சத்யா மீது வைகோவும் கருத்து வேறுபாட்டில் உள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஏற்கனவே மல்லை சத்யாவின் தீவிர ஆதரவாளரான முத்துரத்தினம் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மல்லை சத்யாவும் வைகோவுக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து மதிமுகவுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையே மதிமுகவில் இருந்து மல்லை சத்யா வெளியேற்றப்படலாம் எனவும் அவர் தனிக்கட்சி தொடங்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.