தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் முதல் மகன் முக முத்து. தன்னுடைய அரசியல் வாரிசாக இவரையே கருணாநிதி முதன்முதலில் வளர்த்தெடுத்தார். எம்ஜிஆரை போல இவரை திரையுலகில் ஜொலிக்க வைப்பதற்காக நடிகராகவும் உருவாக்கினார். ஆனால், அதன்பின்பு முக முத்துவின் செயல்பாடுகள், மது பழக்கம், எம்ஜிஆர் மீதான அதீத பற்று உள்ளிட்ட பல காரணங்களால் அவரை முற்றிலும் ஒதுக்கி வைத்தார்.
மு.க. முத்து நேற்று வயது மூப்பு, உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் நேற்று காலமானார். அவர் ஒரு முறை உயிருடன் இருந்தபோது அவரது வாழ்வைச் சீரழித்த மது பழக்கம் எப்படி அவருக்கு உண்டானது? என்பதற்கு அவர் பதில் அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,
நடிகர் ரவிச்சந்திரன் எங்கள் உறவினர். எனக்கு தண்ணியடிக்க முதன்முதலில் கத்துக்கொடுத்ததே அவர்தான். அவர் எனக்கு மாமா முறைதான் வேண்டும். அன்று குடிக்கத் தொடங்கியதுதான், அதன்பின்பு எவ்வளவோ முயற்சித்தும் என்னால் குடிப்பழக்கத்தை நிறுத்தவே முடியவில்லை. என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது என்று மிகவும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னுடைய நிலையை தனது தந்தை கருணாநிதி உள்ளிட்ட யாருமே சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் வேதனையுடன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். கருணாநிதியின் வாரிசுகளான மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி, கனிமொழி, மு.க.தமிழரசன், செல்வி ஆகியோர் தொழில் மற்றும் அரசியலில் பெரும் ஆளுமைகளாக இருக்கும் சூழலில் மு.க.முத்து மட்டும் மிகவும் மோசமான பொருளாதார சூழலில் வாழ்ந்தே வந்தார்.
கருணாநிதிக்கும், அவரது முதல் மனைவியான பத்மாவதிக்கும் கடந்த 1948ம் ஆண்டு ஜுலை 14ம் தேதி பிறந்தவர் மு.க.முத்து. நடிகர், பாடகர் என திறன் கொண்ட இவர் எம்ஜிஆரை பெரியப்பா என்றும், சிவாஜியை சித்தப்பா என்றுமே அன்புடன் அழைப்பார். 1970ம் ஆண்டு பிள்ளையோ பிள்ளை என்ற படம் மூலமாக கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பின்பு, பூக்காரி, சமையற்காரன், அணையா விளக்கு, நம்பிக்கை நட்சத்திரம், இங்கேயும் மனிதர்கள், எல்லாம் அவளே ஆகிய படங்களில் நடித்தார். எம்ஜிஆரின் சாயலிலே திரையில் தோன்றி அசத்திய மு.க.முத்துவால் எம்ஜிஆர் போல திரையில் ஜொலிக்க இயலவில்லை.
சிவகாம சுந்தரி என்பவரை திருமணம் செய்து கொண்ட மு.க.முத்து தனது கடைசி காலத்தில் தனது மகள் தேன்மொழியின் வீட்டிலே வசித்து வந்தார். மது பழக்கத்தால் தனது வாழ்வை சீரழித்துக் கொண்ட மு.க.முத்து மட்டும், மதுப்பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் திமுக-வில் இன்று மிகப்பெரிய ஆளுமையாக முதலமைச்சர் பதவியை அலங்கரித்திருக்கவும் வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆனால், மது பழக்கம் அவருக்கும் திமுக-விற்கும் பெரிய தொடர்பே இல்லாமல் ஆக்கிவிட்டது. மு.க.முத்து எம்ஜிஆருக்காக தேர்தல் பரப்புரையும் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக முத்துவிற்கு மதுப்பழக்கத்தை அறிமுகப்படுத்திய நடிகர் ரவிச்சந்திரன் தமிழில் ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்து வெற்றி கதாநாயகனாக உலா வந்தார். கதாநாயகன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். விஜயகாந்த், ரஜினிகாந்த் என பல பிரபலங்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.