அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கியுள்ள மினி வெப் சீரிஸ் 'சட்டமும் நீதியும் '. “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார். சரவணன் , நம்ரிதா இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். கடந்த ஜூலை 18 ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியான சட்டமும் நீதியும் தொடரின் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்
பல வருடங்கள் முன்பு ஒரு வழக்கில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் நீதிமன்றத்தில் வாதாடாமல் நீதிமன்றத்திற்கு வெளியே நோட்டரி பப்ளிக்காக வேலை செய்து வருகிறார் சுந்தர மூர்த்தி (சரவணன்) . இன்னொரு பக்கம் எப்படியாவது ஒரு நல்ல வழக்கறிஞரிடம் உதவியாளராக சேர்ந்துவிட முயற்சிக்கிறார் அருணா(நம்ரிதா). இதற்கிடையில் குப்புசாமி என்கிற ஒரு நபர் நீதிமன்ற வளாகத்திற்குள் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்கிறார். ஒரு பக்கம் கடன் கொடுத்தவர்கள் கழுத்தை பிடிக்க இன்னொரு பக்கம் வீட்டில் தனது சொந்த மகனால் அவமானப்படுத்தப்படுகிரார் சுந்தர மூர்த்தி. இந்த அவமானத்தைப் போக்க தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட குப்புசாமிக்கு நீதி பெற்று தர பொது நல வழக்குத் தொடர்கிறார். தனக்கு உதவியாளராக அருணாவையும் சேர்த்துக் கொள்கிறார். யார் இந்த குப்புசாமி , சுந்தரமூர்த்தியும் அருணாவும் சேர்ந்து இந்த வழக்கை எப்படி கையாள்கிறார்கள் என்பதே சட்டமும் நீதியும் வெப் சீரிஸின் கதை
மொத்தம் 7 சின்ன சின்ன எபிசோட்கள் இந்த தொடரில் இடம்பெற்றுள்ளன. ஒரு சாதாரண மனிதன் அசாதாரணமாக தோன்றும் ஒன்றை செய்துகாட்டும் வழக்கமான கோர்ட் ரூம் டிராமா டெம்பிளேட்டை தான் இந்த தொடரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. முடிந்த அளவிற்கு ஒவ்வொரு எபிசோடிலும் பார்வையாளர்களை சுவாரஸ்யமாக வைத்திருக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனாலும் எமோஷனலாக கதையுடன் ஒன்றும் அளவிற்கு சீரின் நீளம் ஒரு குறைபாடாக இருக்கிறது. குறைவான நேரத்தில் டெம்பிளேட்டிற்குள் என்ன சொல்ல முடியுமோ அதை மட்டுமே சொல்கிறார்கள். சம்பிரதாயத்திற்கு வில்லன்கள் , எந்த சிக்கலும் இல்லாமல் அடுத்தடுத்து சால்வாகும் பிரச்சனைகள் என கதைசொல்லல் தட்டையாக செல்கிறது. மொத்தம் மூன்றே சவுட்ன் டிராக்கை சீரிஸ் முழுவதும் ஓட்டுகிறார் இசையமைப்பாளர். அதுவும் டைட்டில் டிராக்கை எல்லா பில்டப் காட்சிகளுக்குமே பயன்படுத்தி டல் அடிக்க செய்திருக்கிறார்.
சுந்தரமூர்த்தியாக தனது கதாபாத்திரத்தை சரவணன் முழுவதுமாக சுமந்திருக்கிறார். அவரது முழு ஆற்றலையும் கொண்டு வருவதற்கு ஏற்ற கதை இது என்றாலும் கதாபாத்திர வடிவமைப்பு சுமார் தான். அதேபோல் அருணாவாக நடித்துள்ள நம்ரிதா , எதற்கும் துணிந்த கோபக்கார குணமுடைய ஒரு பெண்ணாக மிக இயல்பாக நடித்துள்ளார்.