சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை தமிழகத்தின் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக விளங்கி வருகிறது. இந்த சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக உள்ள நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கம் காரணமாக, கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
மேலும் இந்த இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலை விபத்து, உயிரிழப்புகளை தவிர்க்கவும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பயண நேரத்தை குறைக்கவும், நான்குவழி சாலையை, பசுமை வழி விரைவுச்சாலை என்று அழைக்கப்படும் 8 வழி அதிவிரைவு சாலையாக மாற்ற, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.
அந்த வகையில், சென்னை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து இந்த 8 வழிச்சாலை தொடங்குவதாகவும், ரூ.26 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் அமைக்கப்படும் இந்தப்பணிக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சாலை செயல்பாட்டுக்கு வரும் சமயத்தில், சென்னை- திருச்சி இடையே 310 கிலோ மீட்டர் தூர பயண நேரம், 6 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும் என்று தெரிவித்துள்ளனர்.