அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது, "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பத்து நாட்களுக்கு முன்பாகவே புகார் கொடுக்கப்பட்டதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் சொல்கிறார்.
அதற்க்கு என்ன ஆதாரம் இருக்கிறது? எந்த அடிப்படையில் இதனை அவர் தெரிவிக்கிறார்? இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பு வெளிவந்தவுடன் எது உண்மை, எது பொய் என்று நாட்டு மக்களுக்கு தெரிந்து விடும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார் என்று நாங்கள் கேட்டால், திமுகவுக்கு ஏன் கோபம் வருகிறது" என்ற கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர், அதற்கு ஆதாரம் இருந்தால் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறுகிறாரே என்று தெரிவிக்க, அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, "ஆதாரத்தை நான் கொடுக்க நீ எதுக்கு ஆட்சியில் இருக்க? ஆட்சியை விட்டு வெளியே வா, ஆதாரத்தை நான் தருகிறேன்" என்று காட்டமாக ஒருமையில் பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவின் அனுதாபி என்கிறார் முதல்வர். ஞானசேகரன் திமுக உறுப்பினர் விண்ணப்பம் வாங்குவாராம், திமுகவின் மாநாட்டுக்கு செல்வாராம், அமைச்சரே வீட்டுக்கு சென்று பிரியாணி சாப்பிடுவாராம். ஆனால் அவர் திமுக இல்லையாம்.
அதுபோக அதிமுக ஆட்சியில் அவர் மீது 22 வழக்குகள் உள்ளன. 2021 திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மீது ஒரு வழக்கு கூட இல்லை. ஞானசேகருக்கு பின்னால் யாரோ ஒரு முக்கிய பிரமுகர் இருக்கிறார். அவர் யார் என்று தான் நாங்கள் கேட்கிறோம். அப்படி கேட்கும் போதே உங்களுக்கு ஏன் எரிச்சலாக இருக்கிறது? பதட்டப்படுகிறீர்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.