அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் போரின் ஒரு பகுதியாக, ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால், வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி வெகுவாக பாதிகப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரானின் துறைமுகங்களை முடக்கும் ட்ரம்ப்பின் அச்சுறுத்தலால், நிலைமை இன்னும் மோசமாகும் என்று உணர்ந்த சவுதி அரேபியா, அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்த ஈரான், அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு தளங்களை கொடுத்த, அருகில் உள்ள வளைகுடா நாடுகளை கடுமையாக தாக்கியது. அதன் எண்ணெய் வளங்கள், உற்பத்தி மையங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின.
இந்த நிலையில், உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. தொடக்கத்தில் அனைத்து கப்பல் போக்குவரத்தையும் தடுத்த ஈரான், பின்னர், இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்களை அனுமதித்தது. எனினும், அந்நாட்டிற்கு பெரும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டதால், ஹார்முஸில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை கொண்டுவந்தது.
இந்த சுழலில், ஏற்கனவே ஹார்முஸை திறப்பதற்காக ஈரானுக்கு பலகட்டங்களாக கெடு விதித்து வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானை முற்றிலும் அழிக்கும் அளவிற்கு எச்சரிக்கையும் விடுத்தார்.
ஆனால் ஈரான் அதற்கும் அஞ்சாத நிலையில், திடீரென அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் ட்ரம்ப். அதன்படி, ஈரானிற்கு உள்ளே வரும், மற்றும் வெளியேறும் அனைத்து கப்பல்களும் முடக்கப்படும் என்றும், மீறினால் தாக்குதலுக்கு உள்ளாகும் எனவும் அவர் அறிவித்தார். ஏற்கனவே பொருளாதார பிரச்னையில் சிக்கியிருக்கும் ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கவே ட்ரம்ப் இவ்வாறு செய்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி மீதான முற்றுகையை கைவிட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு, அமெரிக்காவிற்கு சவுதி அரேபியா அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு காரணமாக, அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, செங்கடலில் உள்ள பாப் அல்-மண்டேப் ஜலசந்தியை ஈரான் முடக்கும் என்றும், அதனால் தங்களது கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கும் எனவும் சவுதி அரேபியா கூறியுள்ளது.
ஏன்னென்றால், ஹார்முஸ் முடக்கப்பட்ட போது, பாலைவனம் வழியாக செங்கடலுக்கு குழாய் மூலம் கச்சா எண்ணெயை கொண்டு சென்று, தனது ஏற்றுமதியை அதிகரித்தது சவுதி அரேபியா. இந்நிலையில், செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து தடுக்கப்பட்டால், சவுதியின் ஏற்றுமதி ஸ்தம்பிக்கும். இதனால் தான், சவுதி அரேபியா தற்போது அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது, பாப் அல்-மண்டேப் அருகே உள்ள நீண்ட கடற்கரைப் பகுதி, யேமனில் உள்ள ஈரானின் ஆதரவு ஹவுதி கூட்டாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏற்கனவே, காசா பகுதியில் நடந்த போரின் பெரும்பகுதி முழுவதும், ஹவுதிகள் அந்த நீர்வழியை கடுமையாக சீர்குலைத்தனர். தற்போது, அந்த நெருக்கடி பகுதியை மீண்டும் மூடுமாறு ஈரான் அக்குழுவிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அரபு அதிகாரிகள் தெரிவித்தனர். சவுதி அரேபியாவின் கவலைக்கு இதுவும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Contact to : xlf550402@gmail.com
Copyright © boyuanhulian 2020 - 2023. All Right Reserved.