உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், போட்டித் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவிக்கு வேலை வாங்கித் தருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பாலியல் வன்கொடுமை செய்த காவலரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த யோகேந்திர சிங் என்ற காவலர், கான்பூர் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி 19-ஆம் தேதி ரயில் பயணத்தின் போது, தேர்வு எழுதச் சென்ற மாணவி ஒருவருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.


அப்போது தன்னை கான்பூர் காவலர் என அறிமுகப்படுத்திக் கொண்ட யோகேந்திர சிங், அந்த மாணவியிடம் “உங்களுக்கு கான்பூரில் என்ன உதவி தேவைப்பட்டாலும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள், நான் உங்களுக்கு நல்ல வேலை வாங்கித் தருகிறேன்” என ஆசை வார்த்தை கூறி அலைபேசி எண்ணைப் பெற்றுள்ளார்.


இதனைத் தொடர்ந்து, அந்த மாணவியிடம் அடிக்கடி பேசி வந்த யோகேந்திர சிங், கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி அவரை நேரில் சந்திக்கும்படி வற்புறுத்தியுள்ளார். அதன்பேரில் கான்பூர் வந்த மாணவியை ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தட்டிக் கேட்டபோது, அவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மாணவியின் தாயாரிடமும் பேசியுள்ளார். இதனை நம்பி மாணவியும் அமைதியாக இருந்துள்ளார். ஆனால், அதன் பிறகு பலமுறை வன்கொடுமை செய்த காவலர், கடைசியில் திருமணம் செய்ய மறுத்து மிரட்டல் விடுத்துள்ளார்.


பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து கான்பூர் மாநகர காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்துப் புகார் அளித்தார். ஆதாரமாக காவலருடன் பேசிய வாட்ஸ்அப் உரையாடல்களையும் சமர்ப்பித்தார். புகாரை ஆய்வு செய்த ஆணையர், உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, காவலர் யோகேந்திர சிங்கை அதிரடியாகக் கைது செய்தனர்.


இது குறித்து காவல் ஆய்வாளர் சதீஷ் சந்திர பாண்டே கூறுகையில், “திருமண ஆசை காட்டி மாணவியை ஏமாற்றியதாகக் காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.


மேலும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே, மாணவியை ஏமாற்றி இத்தகைய செயலில் ஈடுபட்டது கான்பூர் காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காவலர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Contact to : xlf550402@gmail.com


Privacy Agreement

Copyright © boyuanhulian 2020 - 2023. All Right Reserved.