தேர்தல் வந்து விட்டாலே வாக்காளர்களுக்கு ஓட்டு போடுவதற்கு பணம் கொடுப்பது, பரிசுப் பொருட்கள் கொடுப்பது, டோக்கன் கொடுப்பது, கூப்பன் கொடுப்பது என அரசியல் கட்சிகள் தேர்தல் விதிகளை மீறி செயல்படும். இது பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது.. ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என தேர்தல் ஆணையம் எவ்வளவோ சொல்லியும் அரசியல் கட்சிகளும் நிறுத்தவில்லை.. பொதுமக்களும் திருந்தவில்லை..
இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 8 ஆயிரம் மதிப்புள்ள டோக்கன் கொடுக்கப்படும்.. அதில் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கிக் கொள்ளலாம் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது. ஆனால் தேர்தல் நடக்கும் முன்பே தமிழகத்தின் பல தொகுதிகளிலும் திமுகவினர் இந்த டோக்கனை ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுத்து ’திமுகவுக்கு நீங்கள் வாக்களித்து தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் இந்த டோக்கன் செல்லும்’ என்று சொல்லி டோக்கன் விநியோகம் செய்வதாக அதிமுகவின் புகார் சொல்கிறார்கள். சில இடங்களில் கையும் களவுமாக இந்த டோக்கனை வினியோகம் செய்தவர்களை அவர்கள் பிடித்தனர்.
அதாவது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாதிரி கூப்பன்களை உண்மையான கூப்பன் என்கிற போர்வையில் திமுக கட்சியினர் பல இடங்களிலும் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இது உண்மையான கூப்பன் என நம்பி பலரும் வாங்கி செல்கிறார்கள்..
இந்நிலையில்தான் திருச்சி மண்ணச்சநல்லூரில் சிந்துஜா என்கிற தலித் பெண் தனக்கு ரூ.8000 கூப்பன் வழங்கவில்லை என வாக்குவாதம் செய்த போது திமுகவினர் அவரை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர். இதில் அவமானமடைந்த சிந்துஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
. இதையடுத்து, ஆபாசமாக பேசித் தாக்கிய திமுகவினரை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி லால்குடி சாலையில் சிந்துஜாவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்..