சென்னை, ஏப்ரல் 15, 2026: சென்னை மீஞ்சூரில் கல்லூரி மாணவிக்கு போதை கும்பல் மூன்று பேர் சேர்ந்து அரிவாளால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சென்னை அருகே மீஞ்சூர் பகுதியில், செமஸ்டர் தேர்வுக்காக கல்லூரி மாணவி ஒருவர் தனது வீட்டின் முதல் தளத்தில் படித்து கொண்டிருந்தார். அப்போது, வீடு புகுந்த போதையில் இருந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த மாணவியை சரமாரியாக தாக்க தொடங்கினர். அதைத் தடுக்க முயன்ற போது, அவருக்கு பல்வேறு வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆபத்தானா நிலையில் மாணவி மருத்துவமனையில்:

இதனைத் தொடர்ந்து, ரத்த வெள்ளத்தில் இருந்த அந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


அதே சமயம், இதுவரை காவல்துறையினர் ஒருவரை மட்டுமே கைது செய்துள்ள நிலையில், மேலும் இருவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீடு புகுந்து கல்லூரி மாணவியை கொடூரமாக தாக்கிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை கண்டனம்:

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அரசியல் கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,


வல்லூரில், கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல் வீட்டிற்குள் புகுந்து, தேர்வுக்காக படித்து கொண்டிருந்த மாணவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லாத ஆட்சி:

திமுக ஆட்சியின் ஐந்து ஆண்டுகளின் துயரம் இன்று கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளது. போதைப்பொருள் பரவல் அதிகரித்து, இன்றைக்கு குழந்தைகள் கூட தங்கள் சொந்த வீடுகளுக்குள் பாதுகாப்பாக இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.


மாணவியை தாக்கிய மூன்று பேர் கொண்ட கும்பலில் இதுவரை ஒருவரை மட்டுமே போலீசார் கைது செய்துள்ளனர் எனத் தெரிகிறது. போதைப்பொருள் கடத்துபவர்கள், விற்பவர்கள், பயன்படுத்துபவர்கள் யார் என்பதை தமிழ்நாடு போலீசாருக்கு தெரியாதா? திமுக தலைமையால் போலீசாரின் கைகள் கட்டப்பட்டதன் விளைவாக, இன்று தினமும் ஒவ்வொரு மனிதரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.


போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்தாமல் பணம் சம்பாதிக்க நினைக்கும் திமுக ஆட்சி நீடித்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நமது குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற அச்சம் எழுகிறது.


தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு போலீசாரை கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்களின் பொறுமைக்கு எல்லை உண்டு. குழந்தைகளை பாதுகாக்க பொதுமக்கள் தாமே சட்டத்தை கையில் எடுக்கும் நிலைக்கு தள்ள வேண்டாம் என எச்சரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி கண்டனம்:

அதேபோல், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கஞ்சா போதையில் வந்த கும்பல் வீடு புகுந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், அதற்கு எதிராக மாணவி போராடியதால் அவரை கஞ்சா போதை கும்பல் கொடூரமாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.


திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி இருப்பதற்கான கொடூரமான எடுத்துக்காட்டே இந்த சம்பவம். திமுக ஆட்சியில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.


தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமெனில், அதற்கு ஒரே வழி திமுக ஆட்சியை அகற்றுவதுதான். இன்னும் எட்டு நாட்களில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு, அனைவருக்கும் பாதுகாப்பான ஆட்சியை தமிழ்நாடு மக்கள் ஏற்படுத்துவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.








Contact to : xlf550402@gmail.com


Privacy Agreement

Copyright © boyuanhulian 2020 - 2023. All Right Reserved.